For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மாஞ்சோலை விவகாரம் : மறுவாழ்வு திட்ட விவரம் கோரியது உச்ச நீதிமன்றம்!

08:16 AM Jan 11, 2025 IST | Web Editor
மாஞ்சோலை விவகாரம்    மறுவாழ்வு திட்ட விவரம் கோரியது உச்ச நீதிமன்றம்
Advertisement

மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விவரத்தை கூடுதல் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி மாஞ்சோலையை சேர்ந்த ஜான் கென்னடி, அமுதா, சந்திரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில் மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதியில் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. மாஞ்சோலை தேயிலை தோட்டத்துக்கான குத்தகை காலம் 2028-ஆம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி முடிவடையவுள்ளது. ஆனால் குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்பாகவே தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் எஸ்டேட் நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இதனால், தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தையும், வீட்டையும் இழந்து வீதியில் வரும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஏனெனில், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சொந்தமாக இடமோ, வீடோ கிடையாது, சுமார் நான்கு தலைமுறைகளாக மாஞ்சோலை எஸ்டேட்டிலேயே வசிக்கின்றனர். மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும்

மாஞ்சோலை எஸ்டேட்டில் வசிக்கும் 700 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி, அதில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டவும், குடும்பத்தில் ஒருவருக்கு அங்கன்வாடிகளில் பணி வழங்கவும், குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவச கல்வி வழங்கவும், மாற்றுப்பணி வழங்கும் வரை ஒரு குடும்பத்துக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

அந்த மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரேக், “மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும், கலைஞர் கனவு இல்ல திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் உத்தரவாதம் அளித்தபடி எதையும் அரசு செய்யவில்லை. குறிப்பாக மறுவாழ்வு திட்டம் தொடர்பாக எந்த விவரமும் இல்லை எனக் கூறினார்.

இதனையடுத்து மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தி வரும் மறுவாழ்வு திட்டம் தொடர்பாக கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், அந்த மனுவின் நகல் தமிழ்நாடு அரசுக்கு 2 வாரங்களுக்குள் கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு மீதான விசாரணையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Tags :
Advertisement