திமுக பவள விழா பொதுக்கூட்டத்திற்கு #MNM தலைவர் கமல் ஹாசன் வாழ்த்து!
தி.மு.க. பவளவிழாவை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்துரையை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "இரண்டாயிரம் ஆண்டுகளாய் இம்மண்ணில் நீடித்த தீண்டாமை எனும் கொள்ளை நோய்க்கும், ஆதிக்கம் எனும் தொற்று நோய்க்கும், ஏற்றத் தாழ்வு எனும் புற்றுநோய்க்கும் 75 வருடங்களாகத் திமுக தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறது.
திமுக என்றால் என்ன? ஒரே வரியில் சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்டால், 'தமிழுக்கும், தமிழருக்கும் உண்டான பங்கையும், மரியாதையையும் வேற்று சக்திகள் கெடுக்க முனைந்தால், தடுக்கப்பாய்ந்து வரும் தமிழரின் கேடயம்' என்பேன். அனைத்துத் துறைகளிலும் அந்நிய மொழியை நுழைக்க முயன்றதை எதிர்த்த 'ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டமாகட்டும், தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதை எதிர்த்த 'வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது' எனும் முழக்கமாகட்டும் தமிழர்களின் நலன்களுக்காகக் களமாடுவதில் திமுக என்றும் சளைத்ததில்லை.
கருணாநிதி இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுத்த விதம் சரித்திரச் சிறப்பு வாய்ந்தது. சமூகத்தின் ஒளி பாயாத பகுதிகளிலும் தன் சிந்தனையின் கூர்மையால், திட்டங்கள் தீட்டி, 'எல்லோரும் சமமென்பதை' உறுதி செய்த பெருமகனார் கருணாநிதி. அவரது தலைமையில் பொன் போல் பொலிந்தது இந்த இயக்கம். இன்றைக்கு, எனது அருமை நண்பர் மு.க.ஸ்டாலின் கைகளில் திமுக மென்மேலும் மெருகு கூடி, இந்திய நாடெங்கும் திராவிடச் சிந்தனைகள் பொலிகின்றன. வடக்கு மாநிலங்களும் ஸ்டாலினின் திராவிட மாடல் திட்டங்களைச் செயற்படுத்த முனைப்புக் காட்டுகின்றன என்பது தமிழர்கள் பெருமைகொள்ளத்தக்க ஒன்று.
இன்றையப் பெருவிழாவில், தவிர்க்கவே இயலாத காரணங்களால் என்னால் நேரில் கலந்துகொள்ள இயலவில்லையே என்ற மனமார்ந்த வருத்தம் எனக்குள் இருக்கிறது. மற்றொரு புறம் விழாக்கோலத்தை மனக்கண்ணில் கண்டு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எனது சார்பாக இந்தப் பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தார் கலந்துகொண்டிருப்பதில் உவகை அடைகிறேன். எழுபத்தைந்து ஆண்டுகள் கண்ட இப்பேரியக்கம் இன்னும் பல நூறாண்டுகள் செழித்துத் துலங்க வேண்டும்.
தன் சமூகக் கடமைகளை ஆற்றியபடியே இருக்க வேண்டும் என உளமார வாழ்த்துகிறேன். அதைச் செய்து காட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் இளைய தலைமுறைக்கும் இருக்கிறது என்பதை என் அருமைத் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கும் அவரது இளைஞர் படைக்கும் நினைவூட்ட விரும்புகிறேன். பவள விழா கொண்டாடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.