For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இனி தேவையற்ற அழைப்புகளை சுலபமாக அறியலாம் - தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வருகிறது உத்தரவு!

05:58 PM Feb 24, 2024 IST | Web Editor
இனி தேவையற்ற அழைப்புகளை சுலபமாக அறியலாம்   தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வருகிறது உத்தரவு
Advertisement

செல்போன் அழைப்பாளர் அடையாளத்தை காண்பிக்கும் வசதியை நடைமுறைப்படுத்த இறுதி பரிந்துரையை அரசிடம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சமர்ப்பித்துள்ளது.

Advertisement

தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அழைப்பாளர் அடையாளத்தை (காலர் ஐடி) பயனாளர்களுக்கு வழங்க வேண்டும் என தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழிவை வெளியிட்டது. இந்த முன்மொழிவு வெளியிடப்பட்டு சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு டிராய் தற்போது இறுதி பரிந்துரையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

அதன்படி, அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும், வாடிக்கையாளர்களின் வேண்டுகோளின் பேரில், ஒரு துணை சேவையாக அழைப்பாளர் பெயர்களைக் காண்பிக்கும் முறையை செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பாளர் அடையாளத்தை வெளியிடுவதற்கான ஒரு தொழில்நுட்ப மாதிரியை டிராய், மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. மேலும் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இச்சேவையை நடைமுறைப்படுத்த அரசு உத்தரவு பிறப்பிக்குமாறு டிராய் பரிந்துரைத்துள்ளது.

டிஓடி, கடந்த 2022 மார்ச் மாதத்தில் இந்த முன்மொழிவை வழங்கிய பிறகு, டிராய் அதே ஆண்டு நவம்பரில் தொடங்கி, கடந்த மார்ச் வரை ஆலோசனையில் ஈடுபட்டது. அதைத் தொடர்ந்து தற்போது இறுதி பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. டிராயின் இறுதி பரிந்துரையானது அழைப்பாளர் விவரங்களை தொலை தொடர்பு நிறுவனங்களே காண்பிக்கும் சேவை, நடைமுறைக்கு வரும் நிலையை மேலும் ஒரு படி முன்னகர்த்தியுள்ளது.

இந்த அம்சம் நடைமுறைக்கு வந்தால், தற்போது அச்சேவையை விளம்பரங்கள் மற்றும் கட்டண ஆதரவுடன் வழங்கி வரும் 'ட்ரூ காலர்' போன்ற அடையாளத்தை காண்பிக்கும் செயலிகளுக்கு பெருத்த அடி விழும் என தொலைத் தொடர்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் இயல்பான சேவையிலிருந்து அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் வகையில் செயல்பாடுகளை மேம்படுத்த ட்ரூ காலர் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
Advertisement