#Sabarimala மண்டல, மகர விளக்கு பூஜை - முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!
சபரிமலை மண்டல, மகர விளக்கு பூஜை சீசனில், சாமி தரிசனத்திற்கு தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடப்பாண்டு மண்டல, மகர பூஜைகளையொட்டி, அடுத்த மாதம் நவம்பர் மாதம் 16ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதனையொட்டி சபரிமலையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்க, அம்மாநில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நடப்பாண்டு பூஜை காலத்தில், முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பாட் புக்கிங் முறை நிறுத்தப்பட்டதால், நாள் ஒன்றுக்கு முன்பதிவு செய்த 80,000 பேருக்கு மட்டுமே தரிசன வசதி வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியதாவது;
“நடப்பாண்டில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களின் தேவைக்கு ஏற்ப தரமான அப்பம், அரவணை பிரசாதம் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும். கூட்டம் அதிகமாகும் நாட்களில், பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி செய்யப்படும்.
காட்டு வழி நடை பாதையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். நிலக்கல் மற்றும் எருமேலியில் வாகனங்கள் பார்க்கிங் செய்ய கூடுதல் வசதி செய்யப்படும். சபரிமலை செல்லும் சாலைகள், பார்க்கிங் பகுதிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும்” இவ்வாறு தெரிவித்தார்.