"மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை எடுத்து நடத்துவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை" - TANTEA நிர்வாக இயக்குநர் விளக்கம்!
மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை எடுத்து நடத்துவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை என TANTEA நிர்வாக இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் குத்தகை காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே, அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அதனை தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் எடுத்து நடத்த வேண்டும் என நெல்லையை சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துராமன் என்பவர் கடிதம் எழுதி இருந்தார். அவர் எழுதிய கடிதத்தில், "இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில் 1968ம் ஆண்டு தமிழ்நாடு அரசு தேயிலை திட்டத்தை முதன்முதலாக நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் செயல்படுத்தியது.
அதேபோல் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் எடுத்து நடத்த வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதற்கு தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் நிர்வாக இயக்குனர் பதில் அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பதை உறுதி செய்வோம்” – மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!
தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் நிர்வாக இயக்குனர் பதில் அளித்ததாவது :
"1976 ஆம் ஆண்டு திட்டம் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் என மறு பெயர் இடப்பட்டு 453 ஹெக்டர் நிலம் பரப்பளவில் சுமார் 4000 தொழிலாளர்களுடன் 6 நவீன தொழிற்சாலைகளுடன் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் மாஞ்சோலை மலைகிராமத்தில் உள்ள 5 தேயிலை தோட்டங்களையும் TANTEA (தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம்) எடுத்து நடத்துவது தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை"
இவ்வாறு TANTEA நிர்வாக இயக்குனர் பதில் அளித்துள்ளார்.