யூடியூப் பார்த்து தனக்குத் தானே அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர்... மருத்துவமனையில் அனுமதி!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டம் விருந்தாவன் பகுதியைச் சேர்ந்தவர் கன்ஹையா தாகூர். இவரின் மகன் ராஜு பாபு (வயது 32). கடந்த சில ஆண்டுகளாகவே ராஜுவுக்கு தீராத வயிற்று வலி பிரச்னை இருந்துள்ளது. இதற்காக அவர் மருத்துவமனைக்கு சென்று பல்வேறு சிகிச்சை எடுத்தார். இருப்பினும் அவருக்கு வயிற்று வலிக்கான தீர்வு கிடைக்கவில்லை.
சமீபத்தில் ராஜு பாபு, யூடியூப் பக்கத்தில் வயிற்று வலிக்கு அறுவை சிகிச்சை செய்வது எப்படி என தேடி பார்த்தார். பின்னர் அந்த வீடியோவில் வந்தவாறு, தனக்குத்தானே அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும் முடிவெடுத்தார். இதற்காக யூடியூப் வீடியோவில் கூறியபடி அறுவை சிகிச்சைக்கு தேவையான மருந்து, ஊசி, கத்தி என அனைத்தையும் உள்ளூர் மருந்து கடையில் வாங்கினார்.
வீட்டுக்கு வந்தவர் தனக்குத்தானே வயிற்றை கிழித்து, என்ன செய்வது என தெரியாமல் அதில் 11 தையல் போட்டார். முதலில் மருந்தின் வீரியம் காரணமாக அவருக்கு வலி எதுவும் தெரியவில்லை. ஆனால், நேரம் செல்லச்செல்ல சிறுக ஏற்பட்ட வலி அதிகரித்தது. இதனால் வலி தாங்காமல் அவர் அலறினார். பதறி வந்த குடும்பத்தினர், ராஜூவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட ராஜு பாபு, தற்போது மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அவரின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்து இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.