12 கிலோ கஞ்சாவுடன் எழும்பூர் ரயில் நிலையம் வந்த நபர்... போலீசாரை கண்டதும் பையை போட்டுவிட்டு தப்பியோட்டம்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மூன்றாவது நடைமேடையில், இன்று மதியம் ரயில்வே ஆய்வாளர் ஸ்டீபன் ராஜ் தலைமையிலான ஆர்பிஎஃப் போலீசார் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், ஆர்பிஎஃப் போலீசாரை கண்ட உடன் கொண்டு வந்த பையை நடைமேடையில் கீழே போட்டு விட்டு தப்பி ஓடினார்.
இதனைப்பார்த்த ஆர்பிஎஃப் போலீசார் மர்ம நபரை துரத்திச் சென்றனர். ஆனால் அதற்குள் அவர் ஓட்டம் பிடித்தார். பின்னர் நடைமேடையில் விட்டுச் சென்ற பையை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் உயர் ரக வகை கஞ்சா இருப்பது தெரியவந்தது.
பையில் இருந்த 12 கிலோ உயர் ரக கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சத்திற்கும் மேல் இருக்கக்கூடும் என ஆர்பிஎஃப் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து ரயில் நிலையத்தில் கைப்பற்றிய கஞ்சாவை தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.