தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!
கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில், தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. தவெக சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் தொடர்புக்கொண்டு தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் வீட்டிற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர், மிரட்டல் விடுத்ததாகத் தகவல் வெளியானது. உடனடியாக மோப்ப நாய் உதவியுடன் விஜயின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், மிரட்டல் விடுத்தவர் மீனம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயின் கல்லூரியில் பணியாற்றும் சபிக் என அடையாளம் காணப்பட்டார்.
இதையடுத்து, சபிக்கை நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.