மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர்க்கு எதிராக மம்தா பானர்ஜி பிரமாண்ட பேரணி
பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு எழுந்தது.
இதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையமானது தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி குறிப்பிட்ட மாநிலங்களில் கடந்த 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பபணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்ஐஆர் பணிகளை நிறுத்த வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில் இன்றுஎஸ்ஐஆர்-க்கு எதிராக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில் மேற்கு வங்க அமைச்சர்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தாகூர் நகரில் உள்ள பள்ளியில் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
"எங்கள் தாய் மொழி பெங்காலி. நானும் அதே மொழியைப் பேசுகிறேன். நான் பிர்பூமில் பிறந்தேன். அவர்கள் விரும்பினால் என்னையும் வங்காளதேசியர் என்று முத்திரை குத்தலாம். வங்காளத்தில் பல பேச்சுவழக்குகள் உள்ளன, அது புவியியலுக்கு ஏற்ப மாறுகிறது. ஆனால் மொழி வங்காள மொழி தான். அம்பேத்கர் நிறைய யோசித்த பிறகு அரசியலமைப்பை உருவாக்கினார் என்பதை மறந்துவிடாதீர்கள். நமது அரசியலமைப்பு அனைத்து மதத்தினரிடையேயும் நல்லிணக்கத்தைக் கோருகிறது. பாஜக தர்மத்தின் பெயரால் 'அதர்மத்தை' நாடுகிறது.
"வங்காளத்தில் நீங்கள் என் மக்கள் மீதான எந்தவொரு தாக்குதலை நடத்தினால், நான் முழு நாட்டையும் உலுக்குவேன். தேர்தல் ஆணையத்திற்கு ஒரு பெயரைக்கூட நீக்க அதிகாரம் இல்லை. ஒரு SIR நடத்த 3 ஆண்டுகள் ஆகும். இது கடைசியாக 2002 இல் செய்யப்பட்டது. நாங்கள் எஸ்.ஐ.ஆர்-யை ஒருபோதும் எதிர்க்கவில்லை, ஆனால் உண்மையான வாக்காளர்களை நீக்க அனுமதிக்க முடியாது. பாஜக தங்கள் கட்சி அலுவலகத்திலிருந்து பட்டியலை சரிசெய்கிறது. தேர்தல் ஆணையத்தின் வேலை பாரபட்சமற்றதாக இருப்பது. பாஜக கமிஷனாக இருப்பது அல்ல
நீங்கள் CAA-க்கு விண்ணப்பித்து, நீங்கள் ஒரு வங்கதேச குடிமகன் என்றும், இப்போது இந்திய குடிமகனாக இருக்க விரும்புகிறீர்கள் என்றும் நீங்களே அறிவித்தால், நீங்கள் ஒரு வெளிநாட்டவர் எனப்படும். உங்கள் சொந்த மூளையைப் பயன்படுத்துங்கள், சமூக ஊடகங்கள் அல்லது கோடி ஊடகங்களில் நீங்கள் பார்ப்பதை கொண்டு உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்காதீர்கள்" என்றார்.