சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இருதய பிரச்னை மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று முன்தினம் (அக்.1) பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கார்கேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இருதய துடிப்பு சீரான நிலையில் இல்லாததால் பேஸ்மேக்கர் பொருத்த முடிவு செய்தனர். அதன்படி அறுவை சிகிச்சை மூலமாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து கார்கேவின் மகனும், கர்நாடக மாநில அமைச்சருமான பிரியங்க் கார்கே, ”அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. கார்கே நலமாக இருக்கிறார்" என்று தெரிவித்தார். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் தலைவர் கார்கே, பூரண குணமடைய வேண்டி பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கே சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் தனது பணிகளை மீண்டும் தொடங்குவார் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.