மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு - குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை!
கடந்த 2008 செப்டம்பர் 29ல் மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் உள்ள நாசிக்கில் ஒரு மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பிரக்யா சிங் தாக்குர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது உபா மற்றும் இந்திய தண்டனை சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முதலில் இந்த வழக்கானது மராட்டிய பயங்கரவாத எதிர்ப்பு படை விசாரித்து வந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மும்பை தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில் இந்த வழக்கில் மாலேகானில் மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு வைக்கப்பட்டதை அரசுத்தரப்பு நிரூபிக்கவில்லை என கூறி பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் உள்பட 7 பேரையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ”குண்டுவெடிப்பில் பலியான ஆறு பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கவு, காயமடைந்த அனைவருக்கும் ரூ.50,000 இழப்பீடாக வழங்கவும்” நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது