சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் 3-ஆவது இடத்திலிருந்து 5-ஆவது இடத்திற்கு சென்ற மாலத்தீவு!
சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் மாலத்தீவு 3-வது இடத்திலிருந்தது 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்றுவந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவுசெய்தார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்து அமைதியும், அழகும் நிறைந்த லட்சத்தீவு மனதை மயக்குவதாக உள்ளது.
நீங்கள் சாகசத்தை விரும்புபவராக இருந்தால் உங்களின் பயணப் பட்டியலில் லட்சத்தீவு இடம் பெற வேண்டும்’ என்று குறிப்பிட்டார். மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் முயற்சி இருப்பதாக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து, பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து, மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனர். மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: அயோத்தி கோயிலுக்கு 1.75 கிலோ எடையில் வெள்ளி துடைப்பம்!
மத்திய அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினர், கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், நடிகர் ரன்வீர் சிங், நடிகர் அக்சய் குமார், நடிகை கங்கனா உள்ளிட்டோரும் இந்த விவகாரத்தில், மாலத்தீவைக் கண்டித்து, லட்சத்தீவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தகனர்.
இதன் காரணமாக 10,500 ஹோட்டல் முன்பதிவுகளும், 5,520 விமான டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டது. மேலும் #BoycottMaldives என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானது. இந்த நிலையில் சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் மாலத்தீவு 3-வது இடத்திலிருந்தது 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் தற்போது 3-வது இடத்தில் சீனா இடம்பெற்றுள்ளது.