மாலத்தீவு சர்ச்சை: வைரலாகும் தோனியின் பழைய வீடியோ!
மாலத்தீவு பிரச்னைக்கு மத்தியில், இந்திய சுற்றுலாத் தலங்கள் குறித்து தோனி பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்றுவந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவுசெய்தார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்து அமைதியும், அழகும் நிறைந்த லட்சத்தீவு மனதை மயக்குவதாக உள்ளது. நீங்கள் சாகசத்தை விரும்புபவராக இருந்தால் உங்களின் பயணப் பட்டியலில் லட்சத்தீவு இடம் பெற வேண்டும்' என்று குறிப்பிட்டார்.
மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் முயற்சி இருப்பதாக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து, மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனர். மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினர், கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், நடிகர் ரன்வீர் சிங், நடிகர் அக்சய் குமார், நடிகை கங்கனா உள்ளிட்டோரும் இந்த விவகாரத்தில், மாலத்தீவைக் கண்டித்து, லட்சத்தீவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில், இந்திய சுற்றுலாத் தலங்கள் குறித்து தோனி பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
பிடித்த இடம் எது? என்ற கேள்விக்கு பதிலளித்த தோனி,
"கிரிக்கெட் விளையாடும் போது பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டாலும், விளையாடிவிட்டு உடனடியாக திரும்பி வரும் சூழலே இருந்தது. இருப்பினும், எனது மனைவிக்கு பயணம் செய்வதில் அதிக விருப்பம் உள்ளது. தற்போது, நாங்கள் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அந்த பயணத்தை இந்தியாவில் இருந்து தொடங்க விரும்புகிறோம். நம் நாட்டில் பார்வையிட அழகான இடங்கள் பல உள்ளன. முதலில் அவற்றை பார்வையிட வேண்டும்." என்றார்.
Few years ago, MS Dhoni: We want to explore Indian places first then outside India.#Maldives #MaldivesOutpic.twitter.com/JvSk8SAytA
— Farrago Abdullah Parody (@abdullah_0mar) January 8, 2024