மகர விளக்கு பூஜை : சபரிமலை நடை திறப்பு!
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் கோகனரு தலைமையில் மேல்சாந்தி முரளி நடையை திறந்தார். நாளை முதல் அதிகாலை 3 மணியிலிருந்து மதியம் 1 வரையும், மாலை 3 மணியிலிருந்து இரவு 11 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் ஜன.15இல் மகரசங்கரம் பூஜையும் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது.
மகரவிளக்கு பூஜையன்று, சுவாமி ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெறும். அதற்கு முன்பாக ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் பல்வேறு சடங்குகள் நடைபெறவுள்ளன. ஜனவரி 20-ஆம் தேதிவரை கோயில் நடை திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சபரிமலையில் 41 நாள்கள் நடைபெறும் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த புதன்கிழமை (டிச.27) நிறைவடைந்தது. இதையடுத்து, கோயில் நடை சாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.