"மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு 'அமரன்' திரைப்படம் ஆகச்சிறந்த அர்ப்பணிப்பு" - அமைச்சர் #ThangamThenarasu புகழாரம்!
இந்திய எல்லையில் நாட்டைக் காக்க இன்னுயிர் நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அமரன் திரைப்படம் ஆகச்சிறந்த அர்ப்பணிப்பு என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும் முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவி நடித்துள்ளார். உலகளவில் கிட்டதட்ட 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அமரன் திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள நிலையில் பிரபலங்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. குறிப்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, நடிகர் சிவகார்த்திகேயன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் படத்தை பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிலையில், இந்திய எல்லையில் நாட்டைக் காக்க இன்னுயிர் நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அமரன் திரைப்படம் ஆகச்சிறந்த அர்ப்பணிப்பு என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
"நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடனும் அமர்ந்து, 'அமரன்' படம் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது.
சமரசமற்ற வீரத்திற்கும் தியாகத்திற்கும் உதாரணமாக, இன்னுயிரைத் துச்சமெனவும், நாட்டுப் பற்றை மூச்செனவும் கொண்டு களமாடும் இந்திய தேசத்தின் அத்தனை ராணுவ வீரர்களுக்கும் சமர்பிக்கப்பட்டுள்ள 'அமரன்' படக்குழுவினரை மனதார வாழ்த்தினோம். இந்திய எல்லையில் நாட்டைக் காக்க இன்னுயிர் நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு இப்படம் ஆகச்சிறந்த அர்ப்பணிப்பு. நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி மற்றும் ‘அமரன்’படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள்."
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.