சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் #Maharashtra அரசு எடுத்த அதிரடி முடிவு! பசுக்களுக்கு “ராஜ மாதா” அந்தஸ்து!
பசுவை ராஜ மாதா என்று அறிவித்து மகாராஷ்டிர அரசு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய பாரம்பரியத்தில் பசுக்களின் கலாச்சார முக்கியத்துவத்தை காரணம் காட்டி அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவில், பசுக்கள் இந்திய பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்காலத்திலிருந்தே ஆன்மீகம், அறிவியலில் மட்டுமின்றி ராணுவத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் காணப்படும் பல்வேறு வகையான மாடுகள் குறித்து எடுத்துரைத்துள்ள மகாராஷ்டிரா அரசு, உள்நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைவது குறித்து கவலை தெரிவித்திருக்கிறது.
விவசாயத்தில் பசுவின் சாணத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மனிதன் தனது பிரதான உணவில் ஊட்டச்சத்து பெறுகிறான் என்றும் பசு மற்றும் மூலம் கிடைக்கும் பொருள்கள் சமூக-பொருளாதார காரணிகளுடன் பிணைந்தவை என்று அரசின் அறிவிப்பு கூறுகிறது.
பசுகளின் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, கால்நடை வளர்க்கும் மக்கள் நாட்டு மாடுகளை வளர்க்க மகாராஷ்டிர மாநில அரசாங்கம் ஊக்கம் அளிக்கிறது.
இந்தியாவில் இந்து மதத்தில் பசுவுக்கு தாய் அந்தஸ்து வழங்கப்பட்டு வழிபடப்படுவது குறிப்பிடத்தக்கது. இது தவிர, அதன் பால், சிறுநீர், சாணம் ஆகியவை ஒரு தரப்பினரால் புனிதம் கூறப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பசுக்களுக்கு ராஜமாதா அந்தஸ்து வழங்கி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.