பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு ஜாமீன்!
வீட்டு பணிப் பெண்ணை துன்புறுத்தியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது
செய்யப்பட்ட பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும்
மருமகளுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.
கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா ஆகியோர் இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜனவரி 25ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற காவல் புழல் சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் தலைமையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் வழக்கு தொடர்பாக 16 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதி, இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், ஆண்டோ மதிவாணன், அவரின் மனைவி மர்லினா ஆகியோர் 2 வாரங்களுக்கு
விசாரணை அதிகாரி முன்பு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமெனவும்
உத்தரவிட்டார்.