சென்னையில் இன்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
கடந்த 2024-ம் ஆண்டு கட்சி தொடங்கிய நடிகர் விஜய், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு சில மாவட்டங்களில் ரோடு ஷோ நடத்தினார். ஆனால், கரூரில் நடைபெற்ற ரோடு ஷோவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தொடர்ந்து நடிகர் விஜயின் சுற்றுப்பயணம் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், விஜய் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள் அரங்கில் மக்கள் சந்திப்பு நடத்தினார். இதில் 2 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து, புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அதற்கு புதுச்சேரி காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், QR கோட் வைத்திருந்த 5000 பேருக்கு மட்டுமே பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், பேசிய தவெக தலைவர் விஜய் மத்திய அரசை விமர்சித்த நிலையில், புதுச்சேரி அரசை பாராட்டி பேசியிருந்தார். மேலும், திமுக அரசையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், இன்று (டிச.11) தவெக தலைமை நிலையச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
"மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்படி, டிச.11 (இன்று ) காலை 10.00 மணிக்கு, சென்னை, தலைமை நிலையச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், நம் கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் எனக் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.