For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மஹுவா மொய்த்ரா வழக்கு - மக்களவை செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

04:46 PM Jan 03, 2024 IST | Web Editor
மஹுவா மொய்த்ரா வழக்கு   மக்களவை செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Advertisement

எம்பி பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணையில், மக்களவை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கியதாகவும் மற்றும் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹிரா நந்தனியுடன் தனது நாடாளுமன்ற இணையதள பாஸ்வேர்டை பகிர்ந்து கொண்டதாகவும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இது குறித்து புகாரளித்த நிஷிகாந்த் துபே மற்றும் புகாருக்கு உள்ளான மஹுவா மொய்த்ரா ஆகியோரை நேரில் அழைத்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது.

அதில் மஹுவா மொய்த்ரா தொழிலதிபர் ஹிரா நந்தனியிடம் பணம், பரிசு பொருட்களை பெற்று கொண்டு அவரை தனது நாடாளுமன்ற கணக்கின் உள்நுழைவின் மூலம் கேள்வி எழுப்ப அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதற்காகவே மஹுவா மொய்த்ரா தன் இணையதள விபரம், பாஸ்வேர்ட் உள்ளிட்டவற்றை அவரிடம் பகிர்ந்ததாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பரிந்துரை செய்தது.

இது தொடர்பான அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதோடு, அவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானமும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு,  அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். தொடர்ந்து, தனது மனுவை விசாரிக்க டிச. 13 அல்லது டிச. 14-ம் தேதி பட்டியலிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கானது கடந்த டிச.15-ம் தேதி நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என். பாட்டி முன்பாக விசாரணைக்கு வந்தது. மஹுவா மொய்த்ரா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார். முதற்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கை ஜன. 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என்.பாட்டி அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக 3 வாரத்திற்குள் மக்களவை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை மார்ச் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.  

முன்னதாக,  கடவுச்சொல்லை பகிர்ந்தது மட்டுமே அவர் மீதான ஒரே குற்றச்சாட்டு என்றும், நாடாளுமன்ற எம்.பி.க்களின் பக்கத்தை திறக்க கடவுச்சொல் மட்டுமே போதாது என்றும், அதற்கு ஓடிபி தேவைப்படும் என்றும், கடவுச்சொல்லை பகிரக்கூடாது என நாடாளுமன்ற விதிகளில் இல்லை என்றும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். தொடர்ந்து, 2 தனிநபர்கள் தொடர்ந்த வழக்கின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை எனவும் மஹுவா மொய்த்ரா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags :
Advertisement