டெல்லி இல்லத்தை காலி செய்தார் மஹுவா மொய்த்ரா!
திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அரசு இல்லத்தை இன்று (ஜன.18) காலி செய்தார்.
அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் வாங்கியதாகவும் மற்றும் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹிரா நந்தனியுடன் தனது நாடாளுமன்ற இணையதள பாஸ்வேர்டை பகிர்ந்து கொண்டதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இது குறித்து புகாரளித்த நிஷிகாந்த் துபே மற்றும் புகாருக்கு உள்ளான மஹுவா மொய்த்ரா ஆகியோரை நேரில் அழைத்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது.
இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பரிந்துரை செய்தது. இது தொடர்பான அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதோடு, அவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானமும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன.23ல் அமைச்சரவை கூட்டம்!
இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புகளை நிர்வகிக்கும் எஸ்டேட் இயக்குநரகம் மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அரசு ஒதுக்கிய பங்களாவை உடனடியாக காலி செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனிடையே மஹுவா மொய்த்ரா உடனடியாக வெளியேற வேண்டும் என அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அரசு இல்லத்தை இன்று (ஜன.18) காலி செய்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.