#MaharashtraAssemblyElection: பாஜகவை வீழ்த்த காங். கூட்டணிக்கு செல்ல தயார் - ஒவைசி கட்சி அறிவிப்பு!
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகாராஷ்டிர விகாஸ் அகாடியில் இணையத் தயாராக இருப்பதாக அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சியில் இணையத் தயார் என அகில இந்திய மஜ்லிஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் இம்தியாஸ் ஜலீல் கூறியதாவது;
“மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போதும் பாஜகவைத் தோற்கடிப்பதற்காக மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சிகள் அணியில் இணைய விருப்பம் தெரிவித்தோம். அடுத்து நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலிலும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம். பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஆனால், எதிர்க்கட்சி கூட்டணியினர் எங்களை சேர்த்துக் கொள்வது என்பது அவர்கள் கையில்தான் உள்ளது. கூட்டணி ஏற்படாவிட்டால் மஜ்லிஸ் கட்சி தனித்துப் போட்டியிடும்.
எங்களை கூட்டணியில் இணைத்துக் கொண்டால், எதிர்க்கட்சிகளுக்குதான் அதிக பலன் கிடைக்கும். எதிர்க்கட்சிகள் அணியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சி இருப்பதால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. பாஜக நாட்டை மோசமான பாதைக்கு கொண்டு செல்கிறது. எனவே, அக்கட்சியை அனைத்துத் தேர்தல்களிலும் தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் பாஜக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை- துணை முதலமைச்சர் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ்-உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை பிரிவு, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை எதிரணியில் (கூட்டணியான மகாராஷ்டிர விகாஸ் அகாடி) உள்ளன.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 30 இடங்களில் வென்றன. பாஜக கூட்டணி 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 23 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. மக்களவைத் தேர்தலைப் போல, பேரவைத் தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றிபெற அதிகவாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.