#MaharashtraElection | பாஜக கூட்டணி அமோக வெற்றி!
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் கூட்டணி அரசான பாஜக - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியோடும், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் தேர்தலைச் சந்தித்தன. இதில் பதிவான வாக்குகள் இன்று (நவ.23) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள் : “அவதூறு வீடியோக்கள், பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும்” – ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ்!
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை. இதில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 228 இடங்களில் வெற்றி, 6 இடங்களில் முன்னிலை என 234 இடங்களை தன் வசம் வைத்துள்ளது. அதேபோல், காங்கிரஸ் கூட்டணியான மகா விகாஸ் அகாடி 46 இடங்களில் வெற்றி, 2 இடங்களில் முன்னிலை என மொத்தம் 48 இடங்களை தன் வசம் வைத்துள்ளது. இதன் மூலம் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்ற உள்ளது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.