கொலைவழக்கில் தொடர்பு - மகாராஷ்டிரா அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜினாமா!
மகாராஷ்டிராவில் பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில், அமைச்சர் தனஞ்சய் முண்டேவின் நெருங்கிய நண்பருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
“மகாராஷ்டிரா அமைச்சர் தனஞ்சய் முண்டே இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். நான் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைக்காக ஆளுநருக்கு அனுப்பியுள்ளேன்” என அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
பீட் மாவட்டம் பார்லி தாலுகாவில் உள்ள மசாஜோக் கிராமத்தில் மூன்று முறை பஞ்சாயத்து தலைவராக இருந்த 45 வயதான தேஷ்முக், டிசம்பர் 9, 2024 அன்று கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கும், அமைச்சர் தனஞ்சய்க்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த அமைச்சர் தனஞ்சய் முண்டேவின் நெருங்கிய கூட்டாளி வால்மிக் கராத் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து அவரை பதவிவிலக முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கேட்டுக் கொண்டதின் பேரில், பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.