மகாராஷ்டிராவில் அமைச்சரவை விரிவாக்கம் - 39 பேர் பதவியேற்பு!
மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியின் 39 அமைச்சர்கள் இன்று பதவியேற்று கொண்டனர்.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றிப் பெற்றது. இதனையடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த 15ஆம் தேதி பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.
இந்நிலையில் இன்று பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா அரசின் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. நாக்பூரில் நடைபெற்ற இந்த விழாவில் மகாயுதி கூட்டணியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பாஜகவுக்கு 19 அமைச்சரவையும், அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு 11, ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு 9 இடங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மொத்தம் 39 அமைச்சர்கள் பதவியேற்றனர். 33 எம்எல்ஏக்கள் கேபினட் அமைச்சர்களாகவும், 6 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பி.சி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பாஜகவின் மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவான்குலே, ராதாகிருஷ்ண விகே பாட்டீல், சந்திரகாந்த் பாட்டீல், ஆஷிஷ் ஷெலர், கிரீஷ் மகாஜன், கணேஷ் நாயக், மங்கள் பிரதாப் லோதா, ஜெய்குமார் ராவல், பங்கஜா முண்டே, அதுல் சாவே, அசோக் யுகே, ஷிவேந்திரசிங் அபய்சின்ஹராஜே போசலே, ஜெய்குமார் கோர், சஞ்சய் சவ்கரே, நிதேஷ் ரானே, ஆகாஷ் ஃபண்ட்கர், மாதுரி மிசல், பங்கஜ் போயர் , மேகனா போர்டிகர் உள்ளிட்டோர் பதவியேற்றனர்.
ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியின் தாதா பூசே, சம்புராஜ் தேசாய், சஞ்சய் ரத்தோட், சஞ்சய் ஷிர்சாத், பிரதாப் சர்நாயக், பாரத் கோகவாலே, குலாப்ராவ் பாட்டீல், உதய் சமந்த், பிரகாஷ் அபித்கர், ஆஷிஷ் ஜெய்ஸ்வால் , யோகேஷ் கடம் ஆகியோர் பதவியேற்றனர்.
அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மாணிக்கராவ் கோகடே, தத்தாத்ரே வித்தோபா பார்னே, ஹசன் முஷ்ரிப், அதிதி சுனில் தட்கரே மற்றும் தனஞ்சய் முண்டே, நர்ஹரி ஸிர்வால், மகரந்த் ஜாதவ்-பாட்டீல், பாபாசாகேப் பாட்டீல், இந்திரனில் நாயக் ஆகியோர் பதவியேற்றனர்.