மகாராஷ்டிரா #AssemblyElection | இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு - நாளை மறுநாள் வாக்குப்பதிவு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது.
மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 20ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக – ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து மகாயுதி எனும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபுறம் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் ஒன்றிணைந்து மகா விகாஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன.
மகராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதேபோல ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள். இதில் 43 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 13-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய 38 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 20-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
மகாயுதி கூட்டணியில் பாஜக 149, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 81, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களில் போட்டியிடுகின்றன. மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ் 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது. உத்தவ் தாக்கரே சிவசேனா 95, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 86 இடங்களில் களம் காண்கின்றன. 237 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுகிறது. பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி 200 இடங்களிலும் ராஜ்தாக்கரேவின் நவநிர்மாண் சேனா தனித்து 125 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. நாளை மறுநாள் மஹராஷ்டிரா மாநிலத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல ஜார்கண்ட் மாநிலத்திலும் இன்று பிரசாரம் ஓய்ந்து நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.