இந்தியில் ரீமேக் ஆகும் மகாராஜா... விஜய் சேதுபதியாக யார் நடிக்கிறார் தெரியுமா?
விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் மகாராஜா. இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கும் ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்தது.
ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கி மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார். இதன் எதிரொலியால், படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது. திரையரங்கைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியான மகாராஜா ஆச்சரியப்படும் விதமாக இந்தி ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. ஓடிடியில் வெளியான நாள் முதல் மகாராஜா படத்தின் காட்சிகளை இந்தி மீம் கிரியேட்டர்ஸ் புகழ்ந்து வருகிறார்கள்.
இந்தி ரசிகர்களிடையே இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக இப்படத்தை இந்தி ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. மகாராஜா படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை பாலிவுட் நடிகர் ஆமிர் கான் வாங்கியுள்ளதாகவும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் அவரே நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக சூர்யா நடித்த கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் ஆமிர் கான் நடித்திருந்தார். பாலிவுட்டின் மிகச் சிறந்த நடிகர் மற்றும் வசூல் மன்னனான ஆமிர் கான் மகாராஜா படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பது தமிழ், இந்தி என இருதரப்பு ரசிகர்களையும் உற்சாகப் படுத்தியுள்ளது. இப்படம் குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.