மகாளய அமாவாசை | முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்த நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!
மகாளயா அமாவாசையை முன்னிட்டு பல்வேறு புனித நீர்நிலைகளில் பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
தை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை முன்னோர் வழிபாட்டிற்கு மிகச்சிறந்த காலமாக கருதப்படுகிறது. இதனால், மகாளய அமாவாசை அன்று புனித தீர்த்தங்களில் நீராடி திதி கொடுத்தல், தர்ப்பணம் செய்வது வழக்கம். அந்த வகையில், ராமேஸ்வரம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், மஹாலயா அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குற்றாலத்தில் பொதுமக்கள் குவிந்தனர். இன்று அதிகாலை முதலிலே அருவிகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். பக்தர்கள் மகாளயா அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே, பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும், அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் மலையெறி செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும், தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல தடை எனவும் வனத்துறை அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : Sivakasi | போதைக்கு அடிமையாகி பெற்றோரை மிரட்டி பணம் வாங்கிவந்த மகன் - அரிவாள் மனையாள் வெட்டி கொலை செய்த தந்தை!
மகாளய அமாவாசையை முன்னிட்டு மேட்டுப்பாளையம் நந்தவனம் பகுதியில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து, பவானி ஆற்றில் பிண்டம் கரைத்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இதேபோல், மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றின் கரையில் 500க்கும் மேற்பட்டோர் தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்டனர்.சென்னை, மெரினா கடற்கரை பகுதியிலும் முன்னோர்களும் தர்பணம் கொடுத்து பலர் வழிப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் கோயில் முன்பு அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றில் 1000-திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்தி வழிபாடு செய்தனர்.
ஆரணி பகுதியில் உள்ள நாகநதி, கமண்டல நாகநதி ஆற்றின் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி பேரனை ஆஞ்சநேயர் கோயில், வைகை ஆற்று படுகையில் ஏராளமான பக்தர்கள் மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
சீர்காழியை அடுத்த பூம்புகார் காவிரி சங்கமத்தில் மகாளய அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்பணம் கொடுத்தனர். திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் ருத்ரபாதத்திலும் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து ஏராளமானோர் வழிபட்டனர்.