திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோலாகலமாக ஏற்றப்பட்ட மகாதீபம்!
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 220 அடி உயரமுள்ள குன்றத்து மலை மீது, நான்கு ரத வீதி பக்தர்களின் விண்ணெதிரும் கோஷம் முழங்க கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
ஆறுபடை வீடுகளைக் கொண்ட முருகப் பெருமானின் ஒவ்வொரு படைவீடும் ஒவ்வொரு தனிச்சிறப்புகளை கொண்டவை. இந்த ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடாக , மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபத்திருவிழாவாகும்.
பத்து நாள்கள் நடைபெறும் இத்தீபத் திருவிழாவின் கொடியேற்றம், கடந்த நவம்பர் 18 ஆம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து, ஒரு வாரமாக உற்சவருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தினந்தோறும் பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான மலைமேல் உள்ள உச்சி பிள்ளையார் கோயிலில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வு, இன்று மாலை ஆறு மணிக்கு நடைபெறும் என திருக்கோயில் சார்பாக கூறப்பட்டது.
அதன்படி, மக்களின் ஆரவாரங்களோடும், விண்ணதிரும் அரோகரா கோஷங்களுடனும் மகாதீபம் ஏற்றும் நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இம்மகாதீபமானது 3 1/2 அடி உயரம் 1.5 அகல கொப்பரையில், 300 லிட்டர் நெய் மற்றும் 150 மீட்டர் காடாத் துணி மற்றும் 3கிலோ கற்பூரத்தைக் கொண்டது. 220 அடி உயரமுள்ள குன்றத்து மலை மீது நான்கு ரத வீதி பக்தர்களின் கோஷம் முழங்க கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது..