நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற மகா சிவராத்திரி!
நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை கிராமத்தில் அமைந்துள்ளது நல்வழிச் சித்தர் கோயில். இந்த கோயிலில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் இரவு முழுதும் நடைபெற்றது.
முன்னதாக சிவன் கடவுளுக்கு முன்பு உள்ள நந்தி தேவராக கருதப்படும் காளைக்கு ரிஷப பூஜை செய்யப்பட்டது. இதனையடுத்து மகா சிவராத்திரிக்காக மகாராஷ்டிராவில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பின் லிங்கத்திற்கு மஞ்சள் பொடி தூவி அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வெள்ளை லிங்கத்திற்கு பொதுமக்கள் ஒவ்வொருவரும் அபிஷேகம் செய்து பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பின் பத்து அடி ஆழத்தில் வைக்கப்பட்டிருந்த பர்வத மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட லிங்கத்திற்கு நல்வழிச் சித்தர் சிறப்பு பூஜை செய்து இரவு முழுதும் தியானத்தில் இருந்தார். பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து நான்கு கால பூஜைகளையும் பார்த்து சிவபெருமானை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இதனையொட்டி கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் தூங்காமல் இரவு முழுவதும் விழித்திருப்பதற்காக பரதநாட்டியம் மற்றும் சிவபெருமான் பற்றிய புராணக் கதைகள் எடுத்து கூறப்பட்டது.