மகா கும்பமேளா | திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி வரை என 45 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் சந்நியாசிகள், துறவிகள், சாதுக்கள், சாத்விகள், கல்பவாசிகள், யாத்ரீகர்களை பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகின்றனர். கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை பலரும் புனிதமாக கருதுகின்றனர். கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இதில் சுமார் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மகா கும்பமேளாவை முன்னிட்டு சமீபத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இந்த நிலையில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் இன்று (பிப்.10) புனித நீராடினார்.
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக பிரயாக்ராஜ் வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கங்கைக் கரையில் நடைபெறவுள்ள ஆரத்தி வழிபாட்டில் பங்கேற்கிறார். பின்னர் அனுமன் மந்திர் சென்று வழிபடவுள்ளார்.