#Madurai | தனது பிறந்தநாளைக் கேக் வெட்டி கொண்டாடிய அழகர் கோயில் யானை சுந்தரவல்லி!
மதுரை அழகர்கோவில் யானை சுந்தரவல்லியின் 19வது பிறந்தநாளை பக்தர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிரசித்தி பெற்ற அழகர்கோவில் ஶ்ரீ கள்ளழகர் திருக்கோவிலில் சுந்தரவல்லி எனும் யானை உள்ளது. கோவிலில் நடைபெற்று வரும் பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகக் கடந்த 2011ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில் பிறந்த, 5 வயது யானை கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து, திருக்கோவிலில் அதிகாலை நடைபெறும் விஸ்வரூப தரிசனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் யானை சுந்தரவல்லி பங்கேற்று வரும் நிலையில், யானை சுந்தரவல்லிக்கு 19வது பிறந்தநாள் விழா, கோவில் நிர்வாகம் சார்பில் கேக் வெட்டி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, யானை சுந்தரவல்லி அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு வண்ண மலர்களால் மாலை மற்றும் வெள்ளி கொழுசு அணிவிக்கப்பட்டு, கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து யானை குடிலில், கோவில் நிர்வாகம் சார்பில் பாகன் சந்திரசேகரன் தலைமையில், யானைக்கு கேக் வெட்டி பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அப்போது யானை சுந்தரவல்லி, கேக்கில் மெழுகுவர்த்தி அனைத்தும், கேக் வெட்டியும் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், பாகன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் பலர் கலந்துக் கொண்டு யானைக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.