மதுரை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு - அமைச்சர் மூர்த்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு!
மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக நடத்தி வந்த காத்திருப்புப் போராட்டம், தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
சுமார் 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், தங்களது 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த சில நாட்களாகப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, மாநகராட்சி நிர்வாகத்துடன் 10 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் அவை தோல்வியிலேயே முடிந்தன.
இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற 11-வது கட்டப் பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தர ஊதியம், தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்பாட்டை அடுத்து, நாளை முதல் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் பணிக்குச் செல்வார்கள் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இதன் மூலம் மதுரை மாநகரில் கடந்த ஐந்து நாட்களாக நிலவி வந்த குப்பைகள் அகற்றும் பணி மீண்டும் தொடங்கப்படவுள்ளது.