மதுரை | கோலாகலமாகத் தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு - News7Tamil நேரலை!
தமிழர்களின் பாரம்பரியம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைத்திருநாளில் நடைபெறுவது வழக்கம். அதிலும், குறிப்பாக மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறும். நேற்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று (ஜன. 15) மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறுகிறது. இதற்கான, முன்னேற்பாடு பணிகள், மஞ்சமலை ஆற்றில் அமைந்துள்ள வாடிவாசல் பகுதியில், மகாலிங்க சாமி மடத்து கமிட்டி மற்றும் பாலமேடு பேரூராட்சி சார்பாக முழுவதும் நிறைவடைந்தது.
இந்தப் போட்டியில் முதல் பரிசாக சிறந்த காளைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கும் டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் காரும் வழங்கப்படவுள்ளது. இரண்டாவது பரிசாக காளைக்கு நாட்டினப் பசு மற்றும் கன்று, வீரருக்கு பைக் வழங்கப்பட உள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1100 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் களமிறங்குகின்றனர்; பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக சுமார் 2400 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
வீரர்கள் உறுதிமொழி ஏற்றதுடன், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவினை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.