மதுரை மெட்ரோ ரயில் - நிர்வாக இயக்குனர் ஆய்வு !
மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்தின் செயலாக்கம் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்திக் தலைமையில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தெற்கு ரயில்வே துணை பொறியாளர் ஞானசேகர் உள்ளிட்டோர் இன்று (ஜன.17) மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மதுரையில் ரூ.11,360 கோடி மதிப்பில் 31.93 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்பட உள்ள மெட்ரோ வழித்தடத்தில், நிலத்திற்கு கீழே அமையும் 4.65 கி.மீ., தூரம் உள்ள சுரங்கப் பாதை வழித்தட பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து மதுரை ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணியின் வடிவமைப்பையும், மெட்ரோ ரயில் நிலைய வடிவமைப்பையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசித்தனர்.
குறிப்பாக, மதுரை ரயில் நிலையம், ஆண்டாள்புரம் - மதுரைக் கல்லூரி இடையே நிலத்திற்கு கீழே அமையும் ரயில் நிலையங்களின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மெட்ரோ ரயில்வே நிர்வாக இயக்குனர் சித்திக் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "மதுரை ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி ஏற்கனவே நடைபெற்று வரும் நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்தையும் இதனுடன் இணைப்பதற்கு சாத்திய கூறுகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு வருகிறோம்.
மதுரை ரயில் நிலையத்தின் புதிய வடிவமைப்புடன் மெட்ரோ ரயில் நிலையத்தின் வடிவமைப்பையும் ஒருங்கிணைத்து பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வண்ணம் வந்து செல்ல திட்டமிட்டு வருகிறோம். மத்திய அரசு ஒப்புதல் அளித்த சில மாதங்களில் கட்டுமான பணிகள் துவங்கப்படும். பணிகள் தொடங்கி ரயில் சேவை நான்கு வருடங்களில் நிறைவடையும்" என்று தெரிவித்துள்ளார்.