மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா | இன்று தேரோட்டம்!
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல்12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தினமும் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
சித்திரைத் திருவிழாவின் 8-ம் நாள் விழாவில் (ஏப்.19) மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. 9-ம் நாள் (ஏப்.20) இரவு திக்குவிஜயம் நடைபெற்றது.
இந்நிலையில், திருவிழாவின் 10-ம்நாளான நேற்று திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது.இதில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து வந்த சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் காலை 6 மணி அளவில் மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருளினர்.
முன்னதாக, அதிகாலை 4 மணி அளவில் கோயிலில் இருந்து வெள்ளிசிம்மாசனத்தில் மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் சித்திரை வீதிகளில் உள்ளமண்டகப்படிகளில் எழுந்தருளினர். பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள வடக்காடி வீதியில் திருக்கல்யாண மேடைக்கு புறப்பாடாகினர்.
பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மேடைக்கு காலை 7.55 மணிக்கு முருகன் - தெய்வானை, 7.58 மணிக்கு பிரியாவிடை - சுந்தரேஸ்வரர், 8 மணிக்கு மீனாட்சி அம்மன், 8.02 மணிக்கு பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் எழுந்தருளினர்.
மங்கல வாத்தியங்கள் முழங்க, ஹோமம் வளர்க்கப்பட்டு, வேத மந்திரங்கள் ஒலிக்க, காலை 8.37 மணிக்கு காப்புக் கட்டுதல் செய்யப்பட்டது. 8.43 மணிக்கு பவளக்கனிவாய் பெருமாள் தாரை வார்த்துக்கொடுக்க, 8.51 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு சுந்தரேஸ்வரர் திருமங்கல நாண் அணிவிக்க, திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சுவாமிக்கும், அம்மனுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற திருமணமான பெண்கள் புதிய மாங்கல்யக் கயிறு அணிந்து கொண்டனர்.
உற்சவம் நிறைவடைந்த பிறகு, அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து 9.31 மணிக்கு புறப்பட்டு பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். இரவில்ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மனும், யானை வாகனத்தில் சுவாமியும் மாசி வீதிகளில் எழுந்தருளினர்.
திருக்கல்யாண விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், அறநிலையத் துறை அதிகாரிகள், அறங்காவலர்கள் பங்கேற்றனர்.
சித்திரைத் திருவிழாவின் 11-ம் நாளான இன்று காலை 6.30 மணி அளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.