#Madurai | மதுரையில் 15 நிமிடங்களில் 4.5 செமீ மழை பதிவு - மேக வெடிப்பு தான் காரணமா?
மதுரையில் நேற்று மாலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைப்பொழிவிற்கு மேக வெடிப்பு நிகழ்வு தான் காரணமா? வல்லுநர்களின் கருத்து என்ன? என்பது குறித்து காணலாம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்.15-ம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன் விளைவாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (அக். 25) மதியம் தொடங்கி தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். கனமழை காரணமாக வைகை ஆற்றில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.
மதுரையில் உள்ள சர்வேயர் காலனி, முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் தங்க இடமில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மதுரையில் நேற்று மாலை 3 மணி முதல் 15 நிமிடத்தில் 4.5 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. காலை 08.30 - மாலை 05.30 இடைப்பட்ட 9 மணி நேரத்தில் 9.8 செ.மீ மழை பொழிந்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முல்லை நகரில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர், சு.வெங்கடேசன் எம்.பி., அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் நேற்று இரவில் இருந்தே ஆய்வு செய்து வருவதுடன், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் உதவி செய்து வருகின்றனர். இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன் எம்.பி., “இது மிகவும் எதிர்பாராத, ஏறக்குறைய ஒரு மேக வெடிப்பு போன்றது. செல்லூர் கால்வாயில் உள்ள 15 கண்மாய்களும் நிரம்பியுள்ளன. மாவட்ட நிர்வாகம் முழுமையாகக் களத்தில் இறங்கியுள்ளன. பொதுமக்களைத் தங்குவதற்காக ஏற்பாடுகள், உணவு தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்தார்.
மேக வெடிப்பு என்றால் என்ன?
மேக வெடிப்பு ஒரு இயற்கை நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சுமார் 20 - 30 சதுர கிமீ பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 10 செமீக்கு மேல் மழைப்பொழிவு ஏற்பட்டால் அது மேக வெடிப்பு எனக் கணக்கிடப்படுகிறது.
பருவமழைக் காலங்களில், தண்ணீர் துளிகளுடன் மேகம் இருக்கும் பொழுது தரையிலிருந்து மேல் எழும்பும் வெப்பமான காற்று மழைத்துளி விழுந்து விடாத வண்ணம் தடுக்கும். கிட்டத்தட்ட மேகத்தின் வெளியே வந்துவிட்ட நீரை மீண்டும் மேகத்திற்கு உள்ளே இந்த வெப்பக்காற்று அனுப்பும். இவ்வாறு கனமான தண்ணீர் துளிகளை மேகத்திற்கு அனுப்பும் வெப்பக்காற்று அழுத்தமே ஒரேநேரத்தில் மொத்தமாக மழையை கொட்டச் செய்துவிடும்.
இதனால் துளித் துளியாய் அல்லாமல், அருவி போல மழைநீர் கொட்டுவதால் அதன் வீரியமும் வேகமும் மிக அதிகமாக இருக்கும். இதனுடன் காற்றின் வேகம் போன்றவை சேரும்பொழுது அதன் வீரியம் மேலும் அதிகரிக்கும். இதனால்தான் மேக வெடிப்பால், திடீர் வெள்ளப்பெருக்கு கடுமையான நிலச்சரிவு மற்றும் அதிக அளவிலான இடிமின்னல் போன்றவை ஏற்பட்டு சில மணி நேரங்களில் பெரும் சேதங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய மேக வெடிப்புகள் எப்போது எங்கு நிகழும் என்பதை துல்லியமாக கணக்கிட முடியாது என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.
மதுரையில் இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றிருந்தாலும், மேக வெடிப்பினால் ஏற்படும் மழைப்பொழிவை விட குறைந்த அளவே பெய்துள்ளது. அதனடிப்படையில், மதுரையில் மழைப்பொழிவு மேக வெடிப்பாக இருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் பருவமழை பாதிப்புகள் இருந்தாலும், எதிர்பாராத விதமாக அதிக அளவு பாதிப்பு தென் மாவட்டங்களிலேயே ஏற்பட்டது. எனவே, மதுரையில் நிகழ்ந்தது எதிர்பாராத மழைப்பொழிவாகவே கருதப்படுகிறது.