மதுரை காமராஜர் பல்கலை., துணைவேந்தர் குமாரின் ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமாரின் ராஜினாமாவை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொண்டார். புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க வரும் 10-ம் தேதி மதுரை காமராஜர் பல்கலை. சிண்டிகேட் கூட்டம் கூடுகிறது.
தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகமாக மதுரை காமராஜர்
பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி பேராசிரியர் குமார் பொறுப்பேற்றார்.
இதனிடையே, ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்த 136 பேர் பல்கலைக்கழக நிதி நெருக்கடி காரணம் கூறி பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பேராசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கான சம்பளம் ஒரு மாத இடைவெளிக்கு பின் வழங்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் இன்னும் ஒன்றரை ஆண்டு பதவிக்காலம் உள்ள நிலையில் துணைவேந்தராக இருந்த குமார் தனது பதவியை கடந்த 28-ம் தேதி ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்.
பல்கலைக்கழகத்தில் சம்பள பாக்கி வழங்காத காரணத்தால் அங்கு பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் செய்து வருவதாகவும், இதனால் குமார் பதவி விலகல் கடிதம் வழங்கியதாகவும் தகவல் வெளியானது. எனினும் துணைவேந்தர் தரப்பில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பணிகளை தொடர முடியவில்லை எனவும் வேறு எந்த காரணமும் இல்லை எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரை காமராஜர் பல்கலை., துணைவேந்தர் குமாரின் ராஜினாமா கடிதத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் இன்று (மே 4) அவரது ராஜினாமாவை ஏற்பதாக ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் வரும் 10-ம் தேதி புதிய துணைவேந்தரை தெருத்தெடுப்பதற்காக சிண்டிகேட் கூட்டத்தைக் கூட்ட ஒப்புதல் அனுப்பியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து வரும் மே 10-ம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தர் தேர்தெடுக்க சிண்டிகேட் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.