தடைசெய்யப்பட்ட மையோனஸை சாப்பிட்ட நால்வர் மருத்துவமனையில் அனுமதி!
முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து உருவாக்கப்படும் உணவு பொருள் மையோனஸ். இது பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் இந்த உணவுப் பொருள் சாண்ட்விச், ஷவர்மா, பர்கர், பிரட் ஆம்லெட் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு சமீபத்தில் இந்த உணவு பொருளை விற்க தடை செய்தது.
இந்த நிலையில் மதுரையில் தடை செய்யப்பட்ட மையோனஸ் சேர்த்த சவர்மா மற்றும் சிக்கன் சாப்பிட்ட 4 இளைஞர்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாநகர் நரிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் மதுரை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த ஜெபராஜ் (23), சுரேந்தர்(23), கணேஷ் ராஜா(23) மற்றும் பனங்காடியை சேர்ந்த ஜான் (23) ஆகிய நான்கு பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிக்கன்ரைஸ், நூடுல்ஸ், மயோனஸ் மூலம் தயாரிக்கப்பட்ட ஷவர்மா போன்றவற்றை சாப்பிட்ட நிலையில், வாந்தி மற்றும் வயிற்று வலி பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் கீழ் உணவக உரிமையாளர்களை தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.