மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா - ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கியதால் விழாவை புறக்கணித்த 2 பேராசிரியர்கள்!!
மதுரை காமராஜர் பல்கலைகழக 55 வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர்
ஆர்.என்.ரவி கையில் பட்டங்கள் வாங்குவதை தவிற்கும் விதமாக பேராசிரியர்கள் இருவர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் 55 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது, இதில்
தமிழக ஆளுநரும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி
கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அழைப்பிதழ் உரிய முறையில் அளிக்கப்படவில்லை எனவும் விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் பரிந்துரைத்த நிலையில், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்தும் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை.
இதனை தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைகழக மு.வ.அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 602 பேருக்கு முனைவர் பட்டம், 143 பேருக்கு பதக்கங்கள் மேலும் இலக்கிய முனைவர் பட்டம், அறிவியல் முனைவர் பட்டம் என விழாவில் 788 பேருக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
இதனை தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55-வது பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 1,34,531 மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றனர்.
அவர்களில் 1,33,783 மாணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜர்
பல்கலைகழகத்தின் கீழ் உள்ள கல்லூரியில் பருவத் தேர்வு முறையில் தேர்ச்சி
பெற்றவர்கள். அதேபோல் பருவத்தேர்வு முறையில் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் வழங்கப்பட்டது.
முன்னதாக ஆளுநர் வருகையை முன்னிட்டு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த பட்டமளிப்பு விழாவிற்கு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது, மேலும் பட்டம் பெறுபவர்கள் குழந்தைகளை அழைத்து வர அனுமதி இல்லை எனவும் ஆளுநர் உள்ளே அரங்கிற்குள் நுழையும் பொழுது எழுந்து நின்று அனைவரும் வரவேற்க வேண்டும் எனவும், ஆளுநர் மேடையில் அமர்ந்த பின்பு தான் மற்றவர்கள் இருக்கையில் அமர வேண்டும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதே போன்று பட்டம் பெறும் போது பட்டங்களை பெறுபவர்கள் ஆளுநருக்கு வணக்கம் செலுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கிய பின்னர் ஆளுநர் உரை நிகழ்த்தாமல் புறப்பட்டு சென்றார். கடந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவின் போது ஆளுநர் உரையாற்றிய நிலையில் இந்த ஆண்டு
உரையாற்றாமல் புறப்பட்டு சென்றார். இதனை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் அப்துல்கலாம் அரங்கத்தில் பட்டம் பெற்றவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
கடந்த 2 ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட
நிலையில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளது குறிப்பிடதக்கது, முன்னதாக நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில் விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு கௌரவ
டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் பரிந்துரைத்த நிலையில் அதற்கு ஆளுநர்
ஒப்புதல் அளிக்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்
கருப்புகொடி ஏந்தியும், கருப்பு பலூன் பறக்கவிட்டும் போராட்டத்தில் ஈடுட்டதால் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று பட்டமளிப்பு விழாவிற்கு திமுக கொடியுடன் வந்த காரில் இருந்து திமுக கொடியை அகற்றிய பின்னர் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பட்டமளிப்பு விழாவை, 15க்கும் மேற்பட்ட சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர்கள் புறக்கணித்தனர். இதற்காக இவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் "விடுதலை போராட்டம், ஜனநாயக மாண்பு, பல்கலைக்கழகத்தின் உரிமை என எதையும் மதிக்காமல் ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து புறக்கணித்த பேரா.சுரேஷ், பேரா.சி.ரமேஷ்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள்"
"பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த 15 க்கும் மேற்பட்ட சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள் என சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.