மதுரை கள்ளழகர் திருக்கோயில் ஆடித் தேரோட்டம் கோலாகலம்! - தேரை வடம் பிடித்து இழுத்த திரளான பக்தர்கள்!
மேலூர் அருகே உள்ள அழகர்கோயில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோயில் ஆடித் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோயிலில் உள்ள ஶ்ரீ சுந்தரராசா பெருமாள் என்று அழைக்கக்கூடிய ஶ்ரீகள்ளழகர் திருக்கோயிலில், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் சித்திரை திருவிழாவும், ஆடிப் பௌர்ணமியையொட்டி நடைபெறும் தேரோட்ட விழாவும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில் தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டிற்கான 10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பௌர்ணமி திருவிழா கடந்த 13ஆம் தேதி திருக்கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில், கருடன் உருவம் பதித்த கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து, ஶ்ரீகள்ளழகர் ஶ்ரீ தேவி மற்றும் பூதேவியருடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி உற்சவ மூர்த்தியான ஶ்ரீகள்ளழகர் மற்றும் ஶ்ரீதேவி , பூதேவியருக்கு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : நீலகிரியில் தொடரும் கனமழை: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
இதையடுத்து, தேரடியில் உள்ள 60 அடி உயரம் கொண்ட திருத்தேரில் தேவியருடன் எழுந்தருளப்பட்ட ஶ்ரீகள்ளழகருக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தொடர்ந்து, திருக்கோயிலில் உள்ள நான்கு வீதிகளில் திருத்தேர் இழுத்து வரப்பட்டு தேரடியில் உள்ள நிலையை அடைந்தது. இந்த தேரோட்டத்தையொட்டி மாவட்ட நிர்வாகம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர், 100க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை மற்றும், மருத்துவத்துறையினர், வருவாய்த்துறையினர் ஆகியோர் திருக்கோயில் நிர்வாகத்துடன் இணைந்து பக்தர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மற்றும் மருத்துவ உதவி உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்தனர்.
மேலும், திருக்கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் முக்கிய இடங்களில் 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா மற்றும் ட்ரோன் கேமரா அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், திருத்தேரோட்டம் மற்றும் விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளை பக்தர்கள் எளிதில் கண்டு தரிசிக்கும் வகையில் 4 இடங்களில் எல்.இ.டி திரை அமைத்து திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது.