மதுரை சித்திரை திருவிழா -திருமஞ்சனமாகி சேஷ வாகனத்தில் தேனூர் புறப்படும் கள்ளழகர்!
மதுரை சித்திரை திருவிழாவில் இன்று கள்ளழகர் திருமஞ்சனமாகி சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு புறப்படும் நிகழ்வு நடைபெற உள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழாவின் கள்ளழகர் வைபவம் ஏப்.19-ம் தேதி காப்பு கட்டுதல், திருவீதி உலாவுடன் கோலாகலமாக தொடங்கியது. இதையடுத்து, ஏப்.21-ம் தேதி மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்க சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் கண்டாங்கி பட்டு உடுத்தி நேரிக் கம்புடன் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.
இதையும் படியுங்கள் : "ரயிலில் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் இருக்கை.. இது மோடியின் கியாரண்டி.." - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!
இதையடுத்து ஏப்.22 ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் மதுரை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்றது. நேற்று (ஏப்.23) அதிகாலை தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலுக்கும், பின்னர் தங்கக்குதிரை வாகனத்தில் ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணியளவில் எழுந்தருளினார். அங்கிருந்து புறப்பட்டு வைகை ஆறு நோக்கி கள்ளழகர் புறப்பட்டார்.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருள வைகை கரைக்கு அதிகாலை 5.51 மணியளவில் வருகை தந்தார். அங்கு கள்ளழகர் கோயில் சார்பில் பூமாலைகள், வெட்டிவேர் மாலைகள் கள்ளழகருக்கு சாற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். முன்னதாக வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்க எழுந்தருளி இருந்தார்.
இதையடுத்து, கள்ளழகர் சித்திரை திருவிழாவின் 6ம் நாளான இன்று காலை 9 மணியளவில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் கள்ளழகர் திருமஞ்சனம் கண்டருளி சைத்தியோபசாரம் ஏகாந்த சேவை பக்தி உலா வருதல், பின்னர் திருமஞ்சனமாகி சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு புறப்படுதல் ஆகியவை நடைபெற உள்ளது.
பின்னர், பிற்பகல் 12 மணியளவில் கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் எழுந்தருளுகிறார். மாலை 3 மணியளவில் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் திருமஞ்சனமாகி கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்து காட்சி அளிக்கிறார். இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திவான் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகர் தசாவதாரம் நடைபெறவுள்ளது.