மதுரை ஜல்லிக்கட்டு - நாளை முன்பதிவு தொடக்கம்!
மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நாளை (06.01.25) முதல் தொடங்க உள்ளது.
தைத்திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 14-ந்தேதி மதுரை அவனியாபுரம், 15-ந்தேதி பாலமேடு, 16-ந்தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
இதில் அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் திருச்சி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஜல்லிக்கட்டு காளைகள் பங்கு பெறுவது வழக்கம்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்பதிவு, ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை நாளை மாலை 5 மணிமுதல் நாளை மறுநாள் 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
அதே போல் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளையும் madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் ஏதாவது ஒரு கிராமத்தில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படும்.
ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாட்டின் உரிமையாளர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை 06.01.2025 தேதி மாலை 05.00 முதல் 07.01.2025 தேதி மாலை 05.00 மணி முடிய பதிவு செய்திடல் வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன், உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.