மதுரை - ஜபல்பூர் சிறப்பு ரயில் ரத்து உள்பட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட #SouthernRailways !
ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக மதுரை - ஜபல்பூர் இடையிலான சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் செங்கோட்டை - மதுரை ரயில் சேவை குறித்தும் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
செங்கோட்டை - மதுரை ரயில் சேவை:
ராஜபாளையம் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதால் செங்கோட்டை - மதுரை ரயில் (06664) செப்டம்பர் 8, 9 ஆகிய நாட்களில் செங்கோட்டையில் இருந்து 50 நிமிடங்கள் கால தாமதமாக மதியம் 01.00 மணிக்கு புறப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சுரங்கப்பாதை பணிகளில் முக்கிய பணிகள் நிறைவு பெற்றதால் செப்டம்பர் 8, 9 ஆகிய நாட்களில் செங்கோட்டை - மதுரை ரயில் (06664) செங்கோட்டையில் இருந்து வழக்கமாக புறப்படும் நேரமான மதியம் 12.10 மணிக்கு புறப்படும்.
கொச்சுவேலி ரயில் நிலைய பெயர் மாற்றம் :
திருவனந்தபுரம் அருகே உள்ள கொச்சுவேலி ரயில் நிலையம், திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல திருவனந்தபுரம் அருகே உள்ள நேமம் ரயில் நிலையம், திருவனந்தபுரம் தெற்கு ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை - ஜபல்பூர் சிறப்பு ரயில் ரத்து:
இதனை தொடர்ந்து தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால், மதுரையிலிருந்து செப்டம்பர் 29, அக்டோபர் 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஜபல்பூர் சிறப்பு ரயில் (02121) மற்றும் ஜபல்பூரில் இருந்து செப்டம்பர் 26, அக்டோபர் 3 ஆகிய நாட்களில் புறப்படவேண்டிய மதுரை சிறப்பு ரயில் (02122) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.