விழாக்கோலம் பூண்டுள்ள மதுரை... மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று திருக்கல்யாணம்... 1 லட்சம் பேருக்கு தடபுடலாக தயாராகும் விருந்து...
கோயில் நகரமாம் மதுரையின் மிக முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப். 21) கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினமும் (ஏப். 19), திக் விஜயம் நேற்றும் (ஏப். 20) நடைபெற்று முடிவடைந்தது.
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப். 21) காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்கனத்தில் நடைபெறவுள்ளது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு ஆடி - மேல ஆடி சந்திப்பில் திருக்கல்யாணம் மேடை அமைக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண மேடை நறுமணம் மிக்க வெட்டிவேர்கள் மற்றும் பல வகையான வண்ணப்பூக்கள் என 2 டன் பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அலங்கார வளைவுகள் பச்சரியால் அலங்கரிப்பட்டுள்ளது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, தெய்வானையுடனும் மற்றும் பவள கனிவாய் பெருமாளும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எழுந்தருளுவார்கள். சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மன் மணக்கோலத்திலும் தனித்தனி வாகனங்களில் மேடையில் எழுந்தருளவுள்ளனர். காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
திருக்கல்யாண விழாவை முன்னிட்டு 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோயில் வெளிப்புறப் பகுதியில் பக்தர்களின் வசதிக்காக நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் நெரிசல் இன்றி தரிசனம் செய்ய செல்வதற்காக முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
கோயில் வளாகத்தை சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் 20 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக வெயிலின் தாக்கம் இருப்பதால் திருக்கல்யாணம் நடைபெறும் இடத்தில் 200 டன் கொண்ட குளிர்சாதன வசதி பொறுத்தப்பட்டுள்ளது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு 1லட்சம் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்து நடைபெறவுள்ளது. மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபத்தால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நேரலையில் காண: