அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு!
லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி இடைக்கால ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை துணை இயக்குநர் அங்கித் திவாரியை கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். பின்னர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி திண்டுக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கீத் திவாரி மனுத்தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் வழங்க
மறுத்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு
பிறப்பித்தது. இதையடுத்து இரண்டாவது முறையாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அங்கித் திவாரி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.அந்த மனுவில், ‘எனது கைது என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே கைது செய்யப்பட்டு 80 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளேன். இதுவரை வழக்கில் குற்ற பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. சிறையில் உள்ளதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும். ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும்
அத்தனை நிபந்தனைகளையும் முறையாக பின்பற்றுவோம்’ என்று அங்கித் திவாரி குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி விவேக்குமார் சிங் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆஜராகி, ‘உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு மட்டுமே இடைக்கால தடை விதித்துள்ளது. அதனால் தான் இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தயாராக உள்ளது. இந்நிலையில் அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பக்கூடும். எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : பிப்.26 முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ பரப்புரை தொடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இதனையடுத்து அங்கித் திவாரி தரப்பு வழக்கறிஞர், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் மார்ச் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.