பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
கரூர் சத்குரு சதாசிவம் பிரம்மேந்திராள் ஜீவ சமாதி கோயிலில் ஆராதனை விழாவில், பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதித்து தனி நீதிபதி கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார். 2015 முதல் இந்த நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி நவீன்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு, கரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு,
“இதே விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்க கூடாது. உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது மத நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
ஏற்கனவே உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இந்த நடைமுறைக்கு தடை விதித்துள்ள நிலையில், தனி நீதிபதி அந்த தீர்ப்புக்கு மாறாக உத்தரவு பிறப்பிக்க முடியாது” எனக்கூறி பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர்.