இஸ்லாமிய தர்ஹாக்கள், தூதுவர்களை தவறாக விமர்சனம் செய்து முகநூலில் பதிவிட்ட வழக்கு - பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு!
இஸ்லாமிய தர்ஹாக்கள் மற்றும் இஸ்லாமிய மத தூதுவர்களை தவறாக விமர்சனம் செய்து முகநூலில் பதிவிட்ட பாஜக மாநில நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சேர்ந்தவர் குருஜி. இவர் தமிழ்நாடு மாநில பாஜக ஆன்மீக பிரிவு மாநில செயலாளராக உள்ளார். இவர் இஸ்லாமிய மத தூதுவர்களை மற்றும் இஸ்லாமியர்களையும் வழிபாட்டு தர்ஹாகளையும் தவறாக சித்தரித்து, மதக்கலவரத்தை தூண்டும் விதமாக முகநூலில் பதிவுகளை வெளியிட்டிருந்தார். இதனால், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் கைது இவரை கைது செய்யாததால் இவரை கைது செய்யக்கோரி அந்த பகுதியைச் சேர்ந்த அகமது பயாஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் இது போன்ற நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஆனால், இவர் ஏன் கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பியது. இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை தனிப்படை அமைத்து குருஜியை கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட குருஜி தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி உயர்
நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "இஸ்லாமிய மத தூதுவர்களை தவறாக சித்தரித்து, மதக்கலவரத்தை தூண்டும் விதமாக
முகநூலில் பதிவுகளை வெளியிட்ட வழக்கில் கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறேன். வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக
இருக்கிறேன். சாட்சிகளை கலைக்க மாட்டேன். ஆகவே இந்த வழக்கில் எனக்கு ஜாமீன்
வழங்கி உத்தரவிட வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள் : இணையத்தை ஆக்கிரமித்த மலையப்பன்! பேருந்தை ஓரமாக நிறுத்தி 20 மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுநர்!
இந்த மனு நீதிபதி நக்கீரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர் மத மோதல்களை உருவாக்கும் விதத்தில் கடுமையான விமர்சனங்களை தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.
இதே போல இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அகமது பயாஸ் தரப்பிலும் வழக்கறிஞர் ஆதம் அலி ஆஜராகி முகநூலில் பதிவிட்ட அனைத்து புகைப்படங்களையும் நீதிபதியிடம் காண்பித்தனர். அதனை பார்த்த நீதிபதி மனுதாரருக்கு இன்று ஜாமீன் வழங்க மறுத்து அகமது பயாஸ் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கி வழக்கு விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.