மதுரையில் கழிவுநீர் குழாய் உடைந்து விளைநிலத்திற்குள் புகுந்த தண்ணீர் - நோய்தொற்று ஏற்படும் அபாயம்!
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளைக்கல் பகுதியில் கழிவுநீர் குழாய் உடைந்து விவசாய நிலத்திற்குள் கழிவுநீர் செல்வதால் நோய்தொற்று பரவும் அபாயகரமான சுழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சிகளுள் முக்கியமான ஒன்று மதுரை மாநகராட்சியாகும். இங்கு மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இங்குள்ள மொத்த வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுநீர் மாநகராட்சியின் கடைசி வார்டான வெள்ளைக்கல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.
வெள்ளைக்கல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நாள்தோறும் 500 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான அளவில் கழிவுநீர் கொண்டு வரப்படுகிறது. ஆனால் இந்த நிலையத்தின் மொத்த சுத்திகரிப்பு அளவே 125 மெட்ரிக் டன் தான் ஆகும். அளவுக்கு அதிகமான அளவில் வரும் கழிவுநீரின் காரணமாக மீதமுள்ள கழிவுநீர் அருகிலுள்ள கண்மாயில் திறந்து விடப்படுகிறது.
தற்போது கொட்டித் தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மதுரையில் கழிவுநீரின் அளவு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இந்நிலையில் அளவுக்கு அதிகமாக வரும் கழிவுநீரின் அழுத்தம் தாங்காமல் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் அருகிலுள்ள விவசாய நிலங்களில் நதி நீர் போல பாய்ந்தோடி வருகிறது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களில் மேய்ந்து வரும் கால்நடைகள் நோய் தாக்கத்திற்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பாப்பக்குடி கண்மாயில் கலக்கும் கழிவு நீரில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் தற்போது இந்த கழிவு நீர் குழாய் உடைப்பினால் மேலும் இன்னல்களுக்கு உள்ளாகி உள்ளனர்.
எனவே மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டுமென பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேந்தன்