”மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை”- முதலமைச்சருக்கு சு.வெங்கடேசன் கோரிக்கை !
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை மாநகராட்சியை மறுச்சீரமக்க வேண்டும் என்றும் அதற்கு முதலமைச்சரின் தலையீட்டை கோருவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-
”மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை; மாண்புமிகு முதலமைச்சர் தலையீட்டைக் கோருகிறேன். ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 10 லட்சத்துக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட 40 நகரங்களின் பட்டியலில் மதுரை நகரம் கடைசி இடமான 40வது இடத்தைப் பெற்றுள்ளது. மதுரை நகரத்தைப் பொருத்தவரையில் வீட்டுக்கு வீடு குப்பைகள் சேகரிக்கப்படுவது 37%, குப்பை வகைப்பிரித்தல் 26%, உருவாக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்து கையாளும் திறன் வெறும் 4%, குப்பை மேடுகளை மறுசீரமைத்தல் 25% என்கிற அடிப்படையில் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. பொதுக் கழிப்பிடங்கள் மிகவும் தூய்மையின்றி இருப்பதை 3% மதிப்பெண் பெற்றதை வைத்து அறிய முடிகிறது.
இந்த புள்ளிவிபரம் வெளிவந்த பின்னணியிலாவது மதுரை மாநகராட்சி விழிப்புற்று செயல்பட வேண்டும். தங்களின் நடைமுறைகளை சுயபரிசோதனை செய்து கொண்டு உரிய நடவடிக்கைக்குத் தயாராக வேண்டும். மாநில நகராட்சித்துறை அமைச்சர் முன்னிலையில் மதுரை சார் அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். இப்பிரச்சனையை விவாதிக்க மாமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.
மக்களிடம் ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு மற்றும் தொண்டு நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் என அனைவரும் பங்கேற்கும் சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய கடமை பொறுப்பில் இருப்பவர்களுக்கே உள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை நகரத்தின் தூய்மையைப் பேணிக்காக மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் தலையீட்டைக் கோருகிறேன்.”
எனத் தெரிவித்துள்ளார்.