மதுரை சித்திரை திருவிழா முதலாம் நாள் வீதி உலா - நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் சிறப்பு நேரலை!
சித்திரைத் திருவிழா முதலாம் நாள் திருவிழாவான இன்று சுந்தரேஸ்வரர் சுவாமியும், மீனாட்சியம்மனும் வீதி உலா வந்த நிலையில், நியூஸ் 7 தமிழ் பக்தி சேனலில் சிறப்பு நேரலை செய்யப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதம் நடைபெறக்கூடிய சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருவிழாவாக சித்திரை திருவிழா அமைந்துள்ளது.
இந்த ஆண்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா, ஏப்ரல் 12 முதல் 23-ம் தேதி வரை 12 நாட்கள் கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. கோயில் கம்பத்தடி மண்டபத்தின் அருகேயுள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் தர்ப்பை புற்களால் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டுகள் சுற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கல வாத்தியங்கள் இசைக்க, தங்கக் கொடிமரத்தில் உற்சவ கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது.
அந்த வகையில், முதல் நாள் திருவிழாவான இன்று சுந்தரேஸ்வரர் சுவாமி பிரியாவிடை கற்பக விருச்சக வாகனத்திலும், மீனாட்சியம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து புறப்பட்ட வீதி உலா 4 மாசி வீதிகளிலும் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாசி தரிசனம் செய்தனர். பஞ்ச வாத்தியம் முழங்க, கோலாட்டத்துடன் வீதி உலா நடைபெற்றது. சிறுவர், சிறுமியர்கள் மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட கடவுள்கள் போன்று வேடமணிந்து வீதி உலாவில் பங்கேற்றனர்.
மதுரை சித்திரை திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளை காண கீழ் உள்ள நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலின் லிங்கை கிளிக் செய்து பயனடையுங்கள்